Tamil Nadu Budget 2025 New Announcements
தமிழக பட்ஜெட் 2025 பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு
Tamil Nadu Budget 2025 New Announcements: இதுவரை நிறைவேற்றப்படாத அறிவிப்புகளை வருகிற மார்ச் 14ம் தேதி தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் அறிவிக்க தமிழக அரசு முடிவு
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற மார்ச் 14ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு நேற்று அறிவித்தார்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது.இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26/1ன் கீழ் சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தினை சென்னை, தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் வைத்து வருகிற மார்ச் மாதம் 14ம் தேதி (வெள்ளி) காலை 9.30 மணிக்கு கூட்டியுள்ளேன்.
அன்றையதினம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார். மேலும் பேரவை விதி 193/1ன் கீழ் 2025-2026ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகள் பேரவை விதி 189/1ன் கீழ் 2024-2025ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை மார்ச் மாதம் 21ம் தேதி (வெள்ளி) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
தமிழக சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து 14ம் தேதி பட்ஜெட் வாசித்து முடிந்ததும், அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி முடிவு செய்யும். பேரவை கூட்டங்கள் நடைபெறும் அன்று மாலை கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று நினைக்கிறோம். ஆனாலும், இதுபற்றி அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசு சார்பில் மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. காரணம், 2026ம் ஆண்டு தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு முன் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுவாகும்.
2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு புதிய அரசு பதவியேற்றபின்தான் 2026-2027ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
முக்கியமாக திமுக அரசு 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்து, இதுவரை நிறைவேற்றப்படாத அறிவிப்புகளை வருகிற மார்ச் 14ம் தேதி தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத சில புதிய திட்டங்களையும் தமிழக மக்களுக்கு அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில் வருகிற மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக அரசின் பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.மேலும், இந்த சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 14ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை ஒரு வாரம் நடைபெற வாய்ப்புள்ளது. மார்ச் 15ம் தேதி காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.
இதுகுறித்த அறிவிப்பு மார்ச் 14ம் தேதி பிற்பகல் அலுவல் ஆய்வு குழு கூடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த சில நாட்களில் துறை சார்ந்த மானிய கோரிக்கை தாக்கல் செய்து நிறைவேற்றும் வகையில், தமிழக சட்டப்பேரவை மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் மீண்டும் கூட வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமார் 20 நாட்கள் வரை நடைபெறும்.